கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்
விஷால், சுராஜ் இருவருமே ஒரு வெற்றிக்காக சில வருடங்களாக போராடி வருகின்றனர். இவர்கள் இருவருமே இணைந்து வைகைப்புயல் என்ற கூடுதல் பலத்துடன் களம் இறங்கியிருக்கும் படம் தான் கத்தி சண்டை. கத்தி சண்டைக்கு வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.

kaththi-sandai-vimarsanam

கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கண்டேய்னர் நிறைய பணம் போலிஸாரால் கைப்பற்றப்படுகின்றது. அந்த பணத்தை தமன்னாவின் அண்ணன் ஜெகபதிபாபு கைப்பற்றி கவர்மெண்டில் ஒப்படைக்கின்றார்.

இதை தொடர்ந்து விஷால் அப்பாவியாக எண்ட்ரீ ஆகி தமன்னாவிடம் பொய்கள் எல்லாம் சொல்லி காதலிக்க வைக்கின்றார். அதை தொடர்ந்து தமன்னாவின் அண்ணன் விஷாலுக்கு பல டெஸ்ட் வைத்து நீ தான் என் மாப்பிள்ளை என்று கூறுகிறார்.

பிறகு ஜெகபதிபாபுவை ஒரு கும்பல் கடத்தி பணத்தை கேட்டு மிரட்டுகின்றது. பிறகு தான் தெரிகிறது, ஜெகபதி பாபு ரூ 50 கோடியை மட்டும் அரசாங்கத்திடம் கொடுத்து ரூ 250 கோடியை பதுக்கியுள்ளார் என்று, அந்த பணத்தை தமன்னாவுடன் காதல் நாடகம் செய்து விஷால் கைப்பற்ற, அவர் யார்? எதற்காக பணத்தை எடுத்தார்? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
விஷால் இதேபோல் தான் பல படங்களில் நடிக்கின்றார். கொஞ்சம் ட்ரெண்டை மாற்றுங்கள் விஷால், அப்பாவி அதிரடி என இவரே 10 படங்கள் நடித்திருப்பார். அதே போல் தான் இந்த படத்திலும் விஷால் நடித்துள்ளார்.

தமன்னா வெறும் பாடல், டூயட்டிற்கு தான், படத்தின் முதல் பாதியை தாங்கி நிற்பதே சூரியின் காமெடி தான். ஆரம்பத்தில் நெளிய வைத்தாலும், போக போக ரசிக்க வைக்கின்றது. அதிலும் விஷாலின் காதலுக்கு இவர் போடும் கெட்டப்புக்கள் செம்ம.

அதை விடுங்க, வடிவேலு ரீஎண்ட்ரி எப்படியுள்ளது, அதை சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. இரண்டாம் பாதியின் ஒன் மேன் ஷோ வடிவேலு தான், டாக்டர் பூத்ரியாக கலகலப்பிற்கு பஞ்சமில்லை, அதிலும் விஷாலின் காரில் மறைந்து வரும் காட்சி சிரிப்பிற்கு புல் கேரண்டி.

படத்தின் மிகப்பெரும் பலம் ப்ளாஷ் பேக் காட்சிகள் தான், கிட்டத்தட்ட கத்தி தன்னூத்து கிராமம் போல் வரும் அந்த காட்சி இன்னும் கொஞ்சம் முன்பே வந்திருந்தால் மேலும் ரசிக்கப்பட்டு இருக்கும். படம் முடியும் போது வருவது பொறுமையை சோதிக்கின்றது.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் நான் கொஞ்சம் கருப்பு தான் பாடல் ரசிக்கும் ரகம், மற்றதெல்லாம் என்ன பாடல், என்ன வரி என்று நீங்கள் கேட்டு எங்களுக்கு சொல்லுங்கள்.

க்ளாப்ஸ்
சூரி, வடிவேலு காமெடி காட்சிகள்.

கிளைமேக்ஸில் வரும் ப்ளாஷ் பேக் காட்சிகள்.

பல்ப்ஸ்
பார்த்து பழகி போன கதை.

கத்தி, சிட்டிசன் என பல படங்களின் உல்டா நினைவுக்கு வந்து செல்கின்றது, இதில் மெமரி லாஸ் வேறு.

மொத்தத்தில் கத்தி சண்டை விஜய்யின் கத்தி அளவிற்கு எதிர்ப்பார்த்தால் வந்திருப்பது சுந்தர்.சி-யின் சண்டை அளவிற்கு தான்.

166 total views, 1 views today